கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெள்ளை பூச்சி தாக்குதலால் பப்பாளி சாகுபடி பாதிப்பு

 

வருசநாடு, மார்ச் 21: கடமலை-மயிலை பகுதிகளில் வெள்ளை பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்புக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, பொன்னன்படுகை, முருக்கோடை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முருங்கை, அவரை, கப்பை கிழங்கு உள்ளிட்ட விளை பொருள்களை சாகுபடி செய்து வந்தனர். ஆனால், பலத்த சூறைக்காற்று வீசும் காலங்களில் முருங்கை மரங்களும், அவரை கொடிகளும் சேதமடைந்துவிடுவது தொடர்கதையாகி வந்தது. மேலும், காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் கிழங்கு வகை பயிர்களை சாகுபடி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறினர். ஆனால், பப்பாளி மரங்களில் தற்போது நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பலத்த சூறாவளி காற்று, பலத்த மழையின் காரணமாக பல்வேறு விவசாய பொருள்கள் சேதம் அடைந்ததால் மாற்று பயிராக பப்பாளி மரங்கள் வளர்ப்பில் கவனம் செலுத்தினோம். அண்மையில் பலத்த மழை பெய்தபோது பப்பாளி மரங்களில் வேர் அழுகல் நோய் காணப்பட்டது. அதிலிருந்து மீண்டுவந்த நிலையில் தற்போது வெள்ளைப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நோய் பாதிப்பால் பல இடங்களில் பப்பாளி மரங்கள் இறந்து சாந்துவிட்டன. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெள்ளை பூச்சி தாக்குதலால் பப்பாளி சாகுபடி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: