சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துகள் தவறானவை என இந்திய வௌியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 11ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “கடந்த மார்ச் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விஷயங்களை இந்தியா வௌியிட்டது. இது எங்களுக்கு வேதனை தருகிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத சுதந்திரத்துக்கான அடிப்படை மரியாதை தருவது, சட்டத்தின்கீழ் அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவதுதான் உண்மையான ஜனநாயக கோட்பாடு” என்று தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் வௌியிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 குடியுரிமையை பறிப்பதல்ல. குடியுரிமையை வழங்குவது. 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்து, புத்த, சீக்கிய, பார்சி, ஜைன மற்றும் கிறித்துவ சமூகத்தினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இந்த சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். இதுகுறித்த அமெரிக்காவின் கருத்து தவறானது மற்றும் தேவையற்றது. இந்தியாவின் கூட்டாளிகள், நலன் விரும்பிகள் இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கத்தை புரிந்து கொண்டு வரவேற்க வேண்டும்” என்று கூறினார்.

The post சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: