மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

குளச்சல், மார்ச் 12: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசி பெருந்திருவிழா கடந்த 3ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87 வது சமய மாநாடு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 6ம் நாள் கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய வழிபாடான வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு மற்றொரு முக்கிய வழிபாடான பெரிய சக்கர தீ வெட்டி பவனி நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், தொடர்ந்து உஷ பூஜை, அம்மன் வெள்ளிபல்லக்கில் பவனி, உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் சார்பில் சந்தனக்குடம் பவனி, மதியம் பைங்குளம் கண்டன் சாஸ்தா கோயிலிருந்து சந்தனக்குடம் மற்றும் காவடிகள் மண்டைக்காடு திருக்கோயில் வந்தடைந்தன. மாலை தங்கத்தேர் உலா, கூட்டுமங்கலம் ஊர் சார்பில் சந்தனக்குடம் பவனி, சாயரட்சை பூஜை, இரவு அத்தாழ பூஜையை ெதாடர்ந்து பெரிய சக்கர தீவெட்டி பவனி நடந்தது.

இன்று (12ம் தேதி) நள்ளிரவு மாசி பெருந்திருவிழா நிறைவு நிகழ்சியாக ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலிருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது. அதிகாலை 3 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, 6 மணிக்கு குத்தியோட்டம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 க்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோயிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. இந்த ஒடுக்கு பூஜையிலும் பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவர்.

The post மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: