89 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ₹33 கோடியில் செயல்படுத்த நிர்வாக அனுமதி

*திமுக ஆட்சியில் மீண்டும் புத்துயிர்

*428 பணிகள் விரைவில் துவங்குகிறது

வலங்கைமான் : திருவாரூர் மாவட்டத்தில் 89 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ.33கோடியில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதனால் 428 பணிகள் விரைவில் துவங்குகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி, வேலங்குடி நார்த்தாங்குடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் குக் கிராமங்கள் அதிகமாக உள்ள மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகைதிடல் உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரகுநாதபுரம் ஆகிய எட்டு கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22 ம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளபட்டது.

இவ் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் நீர்நிலைகளை புனரமைப்பதற்கு என 30 சதவீதமும், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகளை அமைத்தல் மேம்படுத்த 25 சதவீதமும், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான 10 சதவீதமும், பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுபயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க 15 சதவீதமும், பசுமை மற்றும் சுத்தமான கிராமத்திற்கான ரூபாய் 10 சதவீதமும் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளைப் ஒருங்கிணைப்பதற்கு 10 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் 2022-23ம் நிதி ஆண்டில் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலாழ்வாஞ்சேரி வேலங்குடி வீராணம் தென்குவளவேலி, வடக்குபட்டம், மருவத்தூர், புளியக்குடி,ஆலங்குடி, ஊத்துக்காடு, நார்த்தாங்குடி மூனியூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல, 2023, 24ம் நிதியாண்டில் சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, கீழ விடையல், கொட்டையூர் மதகரம், மணக்கால், பாடகச்சேரி, பெருங்குடி சித்தன்வாலூர், தொழுவூர், விளத்தூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளிலும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம் ஊராட்சிகளில் 30 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 24- 25ம் நிதி ஆண்டில் ஆதிச்சமங்கலம், ஆவூர், சாரநத்தம், பாப்பாகுடி, பூனா இருப்பு, மாத்தூர் ,கண்டியூர் தெற்கு பட்டம் களத்தூர் அரித்துவாரமங்கலம் நல்லூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் உலர் களம் சிமெண்ட் சாலை உள்ளிட்ட 38 பணிகள் ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது.

இதன் மூலம் வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் 41 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து 25- 26ம் நிதியாண்டில் ரெகுநாதபுரம், விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியத்திற்கு உட்பட்ட 89 கிராம ஊராட்சிகளில் 428 பணிகள் சுமார் ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது.

The post 89 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ₹33 கோடியில் செயல்படுத்த நிர்வாக அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: