சிவகிரி அருகே சிவராத்திரி விழாவில் ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒரு எலுமிச்சை கனி

 

மொடக்குறிச்சி, மார்ச் 11: சிவகிரி அருகேயுள்ள மாரப்பம்பாளையம் பூலாங்காட்டில் சிவபெருமான் மறு அவதாரமாக பழப்பூசையன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரிவிழா நடைபெறும். கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழப்பூசையனுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்தனர். அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

சிவராத்திரையையொட்டி வழிபாட்டுக்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு சுவாமி முன்பாக மகா சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை கனி ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் கூறினார்கள். ஈரோட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.35 ஆயிரத்திற்கு எலுமிச்சை கனியை ஏலம் கூறி எடுத்தார். இவ்வாறு ஏலத்தில் எடுக்கும் எலுமிச்சை கனியை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவேதான் ரூ.35 ஆயிரத்திற்கு எலுமிச்சை கனியை ஏலத்தில் எடுத்ததாக பக்தர் தெரிவித்தார்.

The post சிவகிரி அருகே சிவராத்திரி விழாவில் ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒரு எலுமிச்சை கனி appeared first on Dinakaran.

Related Stories: