மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தலைமை தேர்தல் ஆணையருக்கு உள்துறை செயலர் திடீர் அழைப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையரை நேற்று திடீரென உள்துறை செயலர் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மக்களவை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். இதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. காஷ்மீரில் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வௌியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய்பல்லா நேற்று திடீரென தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

மக்களவை தேர்தலுடன், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3.40 லட்சம் மத்திய பாதுகாப்பு படை தேவை என்று தேர்தல் ஆணையம் கேட்டு இருந்தது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு படைகளை அனுப்பி வைப்பது என்பது குறித்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தலைமை தேர்தல் ஆணையருடன் உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து தேர்தல் கமிஷனர்கள் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்தனர். பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய படைகளை அனுப்பி வைக்க வேண்டியது உள்ளதால் சிறப்பு ரயில் ஏற்பாடு குறித்து அப்போது ஆலோசனை நடத்தினர்.

* நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் ஓட்டு போட உள்ளனர்.
* இதற்காக 12.5 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

The post மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தலைமை தேர்தல் ஆணையருக்கு உள்துறை செயலர் திடீர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: