370வது சட்டப்பிரிவு ரத்து குறித்து விமர்சிப்பதோ பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோ குற்றம் ஆகாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து விமர்சிப்பதோ பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோ குற்றம் ஆகாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாவித் அகமது, ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை விமர்சிக்கும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு கருப்பு தினம் என்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் என மற்றொரு குறுஞ்செய்தியையும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவில் அவர் அனுப்பி இருந்தார். இந்த பதிவுகள் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாக கூறி அவர் மீது மராட்டிய போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினர். அதில் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து விமர்சிக்க இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கருப்பு தினம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடுதான் என்றும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் வழக்கு தொடர்ந்தால் ஜனநாயகமே உயிரோடு இருக்காது என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினார். பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்தையோ விமர்சனத்தையோ முன்வைப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

The post 370வது சட்டப்பிரிவு ரத்து குறித்து விமர்சிப்பதோ பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோ குற்றம் ஆகாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: