மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை : அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்,”அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளில் தற்போது மக்கள் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வெளிநாடு செல்வோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழ்நாட்டில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும்.

மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும். மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது,”இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத்துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்) அடங்கிய ஆவணங்களை காண்பித்து ரூ.300 செலுத்தி தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் காலை 11 மணி முதல் 1 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: