கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய பின், பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்: வாரணாசியில் 3வது முறையாக போட்டி!!

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வருகிற ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அஜய் ராய், பி.எஸ்.பி. சார்பில் ஏ. ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாரணாசி தொகுதியில் கடந்த இரண்டு முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ல் வாரணாசியில் 5.81 லட்சம் வாக்குகளையும் 2019ல் 6.74 வட்சம் வாக்குகளையும் மோடி பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையும் பிரதமர் மோடி வாரணாசியில் களமிறங்கியுள்ளார். இதற்காக வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின் போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.பிரதமர் மோடியின் வேட்பு மனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை செய்த பண்டிட் ஞானேஸ்வர் சாஸ்திரி முன்மொழிந்தார். பட்டியலினத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சஞ்சய் சோன்கார் வேட்புமனுவை முன்மொழிந்தார். ஓபிசி சமூகத்தை சேர்ந்த பைஜினாத் படேல், லால்சந்த் குஷ்வாஹா ஆகியோரும் வேட்புமனுவை முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய பின், பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்: வாரணாசியில் 3வது முறையாக போட்டி!! appeared first on Dinakaran.

Related Stories: