மிளகாய் தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தா.பழூர், மார்ச் 7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு காரைக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநா(பொ.) செல்வகுமார் தலைமை வகித்து பேசுகையில், இப்பண்ணைப் பள்ளியின் நோக்கம் காய்கறி சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் நன்கு கற்றுணர்ந்து விதை நேர்த்தி செய்து அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் என கூறினார்.

மேலும் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், காய்கறி சாகுபடியில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்திட இயற்கை இடுப்பொருள் சார்ந்த கரைசலை பயன்படுத்த வேண்டும் எனவும், ரசாயான பூச்சி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் பேசுகையில், கோடை உழவு செய்வதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் எனவும், பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு செய்து மடக்கி உழுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவும் நோய்களை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இளம் நாற்றுகளை பயன்படுத்துதல், முட்டை ஒட்டுண்ணி, மஞ்சள் வண்ண அட்டை மற்றும் நீலவண்ண அட்டை பயன்படுத்துவதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறி, விளக்கு பொறி மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிந்து பாதுகாப்பதன் மூலம் உரம் பூச்சி மருந்து செலவினங்களை குறைத்து குறைந்த செலவில் அதிக மகசூலை பெறலாம் என கூறினார்.

பயிற்சியின் முடிவில் மிளகாய் சாகுபடி செய்த வயலில் சென்று பூச்சிநோயினால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என செயல்விளக்கம் மூலம் எடுத்து கூறினர். முன்னதாக வட்டார தொழில் நுட்பமேலாளர் சகாதேவன் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று அட்மா திட்டம் குறித்தும் பண்ணைப்பள்ளி பயிற்சி குறித்தும் எடுத்து கூறினார். இதில் உதவி தொழில் நுட்பமேலாளர் உஷா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் முன்னோடி விவசாயிகள் பெரும் பலானோர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

The post மிளகாய் தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: