தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின், தொழில் நிறுவனங்களுடன் இன்று (04.03.2024) சிப்காட் தொழில் நண்பன் சந்திப்புக் கூட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின், தொழில் நிறுவனங்களுடன் இன்று (04.03.2024) சிப்காட் தொழில் நண்பன் சந்திப்புக் கூட்டம் (SIPCOT Biz Buddy Meet) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள், 24.02.2024 அன்று கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின் தொழில் நிறுவனங்களுடன் சிப்காட் தொழில் நண்பன் சந்திப்புக் கூட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) நிறுவப்பட்டதிலிருந்து, இதுவரை தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற்பூங்காக்களை சுமார் 38,696 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தி, தொழில் வளர்ச்சியடைய பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிப்காட் தொழில் பூங்காக்களில் தரமான சாலை வசதி, தெருவிளக்கு, மழைநீர் வடிகால், நீர்விநியோகம், கண்காணிப்பு அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு போன்ற அடிப்படை வசதிகளோடும் சிறப்பு கட்டமைப்புகளான தொழிலாளர் தங்குமிடவசதி, தொழில் புத்தாக்கமையம், சரக்கு வாகன நிறுத்தம் மற்றும் போதுமான பசுமை சூழல் மேம்பாடு, நன்கு பராமரிக்கப்படும் திறந்தவெளி பகுதிகள் (OSR) ஆகியவற்றினை ஏற்படுத்தி சிப்காட் நிலையான சுற்றுச்சூழல் பாதுக்காப்பு கொண்ட தொழில் பூங்காக்களாக மாற்றி வருகிறது.

சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள குறைகளை கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டு, இன்று (04.03.2024) சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம் (SIPCOT Biz Buddy Meet), அனைத்து சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள திட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சிப்காட் தொழில் பூங்காக்களில் தொழிற்சாலை நடத்துபவர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். ஒவ்வொரு சிப்காட் தொழில் பூங்காவிலும் நடைபெற்ற தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தினை சிப்காட் தலைமை அலுவலகத்திலிருந்து தனித்தனி கண்காணிப்பு அலுவலரால் அங்கு தொழிற்சாலை நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்திற்கு பின்பு சிப்காட் கண்காணிப்பு அலுவலர்கள், அவரவர் தொழில் பூங்காக்களில் நேரில் களஆய்வு செய்தும், தொழில் பூங்காக்களில் மேலும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த நிகழ்வில் பங்கேற்ற தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை சிப்காட் நிர்வாகத்திற்கும் மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

இன்று (04.03.2024) நடைபெற்ற தொழில் நண்பன் சந்திப்பு கூட்டத்தின் மூலம் மொத்தம் 177 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவ்வப்பொழுது, தொழில் முனைவோர்கள் மற்றும் பொது மக்கள், சிப்காட் தொழில் பூங்காக்களில் காணப்படும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின், தொழில் நிறுவனங்களுடன் இன்று (04.03.2024) சிப்காட் தொழில் நண்பன் சந்திப்புக் கூட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: