சிங்கபெருமாள் கோயில் அருகே பெண்ணிடம் 12 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள்கோவில் அருகே நேற்று மொபெட்டில் சென்ற பெண்ணை முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அப்பெண்ணை கீழே தள்ளி, அவரது கழுத்தில் 12 சவரன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே கருநிலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி வெண்ணிலா (32). இவர், தாம்பரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவி கணக்காளராக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு, மொபெட்டில் வெண்ணிலா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் கருநிலம், பத்மாவதி நகர் அருகே மொபெட்டில் வந்தபோது, எதிரோ முகமூடி அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் வெண்ணிலா ஓட்டிவந்த மொபெட்டை 2 மர்ம நபர்களும் எட்டி உதைத்தனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இச்சந்தர்ப்பத்தில் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க காசுகள் அடங்கிய 10 சவரன் தாலிச்சங்கிலி, மற்றொரு 2 சவரன் சங்கிலி என மொத்தம் 12 சவரன் தங்க நகைகளை 2 மர்ம நபர்களும் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்த வெண்ணிலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெண்ணிலா புகார் தெரிவித்தார். இப்புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post சிங்கபெருமாள் கோயில் அருகே பெண்ணிடம் 12 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: