பிரதமர் மோடி தமிழகத்தில் குடியேறினாலும் பாஜவை மக்கள் ஏற்கமாட்டார்கள்

விளாத்திகுளம், மார்ச் 4: பிரதமர் மோடி தமிழகத்தில் குடியேறினாலும் பாஜவை மக்கள் ஏற்கமாட்டார்கள் என விளாத்திகுளத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. விளாத்திகுளம்- மதுரை சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் தொகுதி எம்எல்வுமான மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில்
‘‘ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜிஎஸ்டி என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களில் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளை அடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்து பாஜ ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் திமுக அரசு அஞ்சுவதில்லை. டெல்லியில் விவசாயிகளில் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு சென்னையிலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை. வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரையிருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் பாஜவையும், அவரது தலைமையிலான ஒன்றிய அரசையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே, விரைவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடும் நமதே; நாற்பதும் நமதே’’ என்றார்.

கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நெசவாளர் அணி மாநில துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் விளாத்திகுளம் மத்தி ராமசுப்பு, மேற்கு அன்புராஜன், கிழக்கு சின்னமாரிமுத்து, புதூர் மத்தி ராதாகிருஷ்ணன், கிழக்கு செல்வராஜ், மேற்கு மும்மூர்த்தி ஓட்டப்பிடாரம் கிழக்கு காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு நவநீதகண்ணன், பேரூர் செயலாளர்கள் விளாத்திகுளம் வேலுச்சாமி, எட்டயபுரம் பாரதி கணேசன், புதூர் மருதுபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, பேரூராட்சி தலைவர்கள் விளாத்திகுளம் அய்யன்ராஜ், எட்டயபுரம் ராமலட்சுமி, புதூர் வனிதா, மாவட்ட கவுன்சிலர்கள் மிக்கேல் நவமணி, தங்கமாரியம்மாள், இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட துணை அமைப்பாளர் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த முன்னோடிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post பிரதமர் மோடி தமிழகத்தில் குடியேறினாலும் பாஜவை மக்கள் ஏற்கமாட்டார்கள் appeared first on Dinakaran.

Related Stories: