பஞ்ச நந்திகள்

பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். இவை முறையே இந்திர நந்தி, வேத நந்தி (எனும் பிரம்மநந்தி) ஆத்மநந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது) மால் விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தருமநந்தி என்றழைக்கப்படும்.ஒரு சமயம், இந்திரன் இடபவடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திரநந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியை கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.பின்னர், ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான்.

வேதனான பிரம்மன் நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை வேதநந்தி, வேதவெள்விடை, பிரம்மநந்தி என்று பலபெயர்களால் அழைக்கின்றனர். பிரம்மம் என்பதற்கு ‘அளவிட முடியாத பெருமைகளை உடையது’ என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப் பெரியதாகவும் கம்பீரமானதாகவும் அமைப்பர். அந்த நந்தியைச் சுதையினாலும் சுண்ணாம்புச் சாந்தினாலும் ராமேஸ்வரம், காஞ்சீபுரம் முதலான தலங்களில் இத்தகைய பிரம்மாண்டமான வேத வெள்விடையை பெரிய மண்டபத்துள் காணலாம்.மூன்றாவதாக, ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும்.

இது உலக உயிர்களான (பசுக்கள் எனப்படும்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து அவனுடைய நினைவில் நிலைபெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில், பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.இனி நான்காவதான மால் விடையைக் காணலாம். ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினர். அதை உணர்ந்த சிவபெருமான் அந்தத் தேர் தட்டின் மீது தன் வலக்காலை ஊன்றி ஏறினார்.

அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால அழுத்தத்தைக் கூட தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு அஞ்சி பெருமானைத் தொழுதனர். அப்போது திருமால் இடபவடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தான். இந்த நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு அவர் சந்நதியில் நிலையாக எழுந்தருளினான். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை மால்விடை, மால்வெள்விடை என்று பலவாறு அழைப்பர். ஐந்தாவதாக மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். உலகம் சிவபெருமானிடத்தே ஒடுங்குகின்ற சங்கார காலத்தே உலகம் யாவும் அழியும்.

பிரளய வெள்ளம் பொங்கிப் பெருகி வானாவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும். அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று
இடபவடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக் கொள்வான். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவனுடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகா மண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.இவை தவிர உட்கோபுர வாயிலின் உட்பகுதியில் வடக்கு நோக்கியவாறு அதிகார நந்தியும், கருவறைக்கு பின்புறம் விருஷபர் என்கின்ற நந்தியும் இருக்கக் காணலாம். ஆதலின் பூரணமான சிவாலயத்தில் ஏழு நந்திகளை அமைக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.

ஜெயசெல்வி

The post பஞ்ச நந்திகள் appeared first on Dinakaran.

Related Stories: