பாம்பன் கடலில் புதிய ரயில் தூக்குப்பாலம் பணி மந்தம்: பயன்பாட்டுக்கு வர தாமதமாகும்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதனால் பயன்பாட்டுக்கு வர மேலும் சில மாதங்களாகும் என கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் உள்ள ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வந்தது. இதனால் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. பாம்பனுக்கும், மண்டபத்துக்கும் இடையில் கடலில் இருவழித்தடத்துடன் மின்சார ரயில் போக்குவரத்துக்கான பாலம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதில் கப்பல் செல்லும்போது செங்குத்தாக தூக்கி வழிவிடும் வகையில் வெர்டிகிள் வடிவத்தில் நவீன தொழில்நுட்பத்தில் தூக்குப்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கான முதல்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்து 2020ல் பாலம் கட்டுமான பணிகள் துவங்கின. இதனிடையே கொரோனா தொற்று ஊரடங்கு, புயல், காற்று போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பணியில் தேக்கநிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பணிகள் விரிவாக நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் வரை 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த பிப். 24ம் தேதி ரயில் பாலம் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கப்பல் செல்வதற்காக அமைக்கப்படவுள்ள வெர்டிகிள் பாலம் பொருத்தும் பணி முடிவடையாததால் பாலம் திறப்பதற்கு மேலும் பல மாதங்களாகும் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.525 கோடி நிதியை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மண்டபத்தில் பாலம் துவங்கும் இடத்தில் துவங்கி, கப்பல் கால்வாய் வரை கடலில் அமைந்துள்ள தூண்கள் அனைத்திலும் இரும்பு கர்டர் பொருத்தப்பட்டு இதன் மேல் தண்டவாளங்களும் இணைக்கப்பட்டு விட்டது. ஆனால் பாம்பன் பகுதியில் இருந்து கால்வாய் வரை கடலில் அமைந்துள்ள தூண்களில் 17ல் தற்போது வரை இரும்பு கர்டர் அமைக்கும் பணி முடியவில்லை. மேலும் கப்பல் செல்ல உயரத் தூக்கி வழி விடும் வெர்டிகிள் தூக்குப்பாலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பொருத்தும் பணியும் இன்னும் முடிவு பெறவில்லை. கடலில் நிற்கும் தூண்களின் மேல் இரும்பு கர்டர் வைத்து தண்டவாளங்களை பொருத்தும் பணி, வெர்டிகிள் தூக்கு பாலம் பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்தால்தான் பாம்பன் ரயில் பாலத்தை திறக்க முடியும். ஆனால் அனைத்து பணிகளும் முழுமை பெறுவதற்கு இன்னும் சில மாதங்களாகலாம் என்று பணியில் இருக்கும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

* 2.07 கிமீ நீள பாலம்

பாம்பன் கடலில் இருவழித்தடத்துடன் அமைக்கப்பட்டு வரும் புதிய மின்சார ரயில் பாலத்தின் நீளம் 2.07 கிமீ. கடலுக்குள் மொத்த தூண்கள் 99. தூண்களை இணைக்கும் இரும்பு கர்டர்கள் 99. வெர்டிக்கிள் தூக்குப்பாலம் பொருத்தும் இரும்பு தூண்கள் உயரம் 35 மீட்டர். எடை 600 டன். கப்பல் செல்ல தூக்கி வழி விடும் வெர்டிக்கிள் தூக்குப்பாலத்தின் நீளம் 72.1 மீட்டர். மொத்த எடை 500 டன். 17 மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக மேல் நோக்கி சென்று கப்பல் செல்ல வழி விடும். எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தில் தூக்குப்பாலம் இயங்கும்.

The post பாம்பன் கடலில் புதிய ரயில் தூக்குப்பாலம் பணி மந்தம்: பயன்பாட்டுக்கு வர தாமதமாகும் appeared first on Dinakaran.

Related Stories: