71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கிறார்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு ஏற்பாடு; தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் காலை 8 மணியளவில் மலர் வளையம் வைத்து வணங்குகிறார். தொடர்ந்து அவர், முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் 8.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலைஞரின் கோபாலபுரம் இல்லம் சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். மேலும், கலைஞரின் சி.ஐ.டி. காலனி இல்லம் மற்றும் பேராசிரியர் இல்லத்துக்கு சென்று அவர்களது திருவுருப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தொடர்ந்து காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார். இதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சென்னைக்கு நேற்று இரவில் இருந்து திரண்டு வரத்தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கணக்கானோர் சென்னை அண்ணா அறிவாலயம் வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவராக சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வழங்க உள்ளனர். மேலும், ஒரு மாத காலத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

The post 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கிறார்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு ஏற்பாடு; தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: