ஆந்திராவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார் ஜெகன்: சந்திரபாபு நாயுடு காட்டம்

திருமலை: ஆந்திராவை அழிவுப்பாதைக்கு ஜெகன்மோகன் கொண்டு செல்வதாக தேர்தல் பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.ஆந்திராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் இணைய பாஜகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் களம் காண்கிறது.

இந்நிலையில் அந்தந்த கட்சிகள் தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டன. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடபள்ளிகூடத்தில் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணியின் முதல் பிரசார மாநாடு நேற்றிரவு நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது சந்திரபாபு பேசியதாவது:

மாநில நலனை கருத்திற்கொண்டே இந்தகூட்டணியை நாங்கள் உருவாகி உள்ளோம். குறிப்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆணவத்தை அகற்றுவதற்காகவே நானும், பவன்கல்யாணும் இணைந்துள்ளோம். எனது ஆட்சிக்காலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவரப்பட்டு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினேன். ஆனால் தற்போதைய ஜெகன்மோகன் ஆட்சியில் ஆந்திராவை அழிவுப்பாதை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. எனவே மீண்டும் நல்லாட்சி மலர இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு பேசினார்.

பவன்கல்யாண் பேசுகையில், ‘மக்கள் பிரச்னைக்காகவே நாங்கள் இணைந்துள்ளோம். உடல்நலம் பாதிப்பு இருந்தாலும் சந்திரபாபு மாநில வளர்ச்சிக்காக அரசியல் செய்து வருகிறார். எனவே அவரை வலுப்படுத்தும் வகையில் கூட்டணி அமைத்துள்ளேன். பணம் சம்பாதிக்க விரும்பியிருந்தால் சினிமாவில் மட்டுமே இருந்திருப்பேன். ஆனால் மக்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக எனது தோல்விகள், என் மீதான விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளேன்’ என்றார்.

The post ஆந்திராவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார் ஜெகன்: சந்திரபாபு நாயுடு காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: