ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

கோவை: கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நேற்று இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவை பாலசுந்தரம் சாலையில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கோவைக்கு வந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு சென்றார். பின்னர் அங்கு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் அறைகள், சுகாதாரமான கழிப்பறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாணவரிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். ஒரு மாணவர் தனது அறையில் அரசியல் தலைவர்களின் ஓவியம் வரைந்திருந்தார். அந்த மாணவரை உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். பின்னர் மாணவர்கள் அமைச்சர் உதயநிதியுடன் நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி, அரசு செயலாளர் தாரேஸ் அகமது, கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து இன்று கொடிசியா அரங்கில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார், பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

The post ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: