கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வருகிறது.

இதனால் பகல் 11 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. இதனால் திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். இதை அறிந்த தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை தொழிலகப் பாதுகாப்பு துறை சுகாதார இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.
* கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் வகையில் கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
* அனல் கக்கும் வெயிலால் திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள்.
* இந்த புதிய நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைப்பிடிக்கப்படும்.

The post கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: