கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நேற்று (13ம்தேதி) மாலை மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக குமரி கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் மேளதாளத்துடன் கொடிக்கயிறை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அந்த கொடிக்கயிற்றை பகவதியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து கோயில் மேலாளர் ஆனந்திடம் ஒப்படைத்தனர். இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை கொண்டு வந்து பகவதியம்மன் கோயிலில் ஒப்படைத்தனர்.
1ம் திருவிழாவான இன்று காலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் 7.30 மணிக்கு கொடிமர பூஜைகள் தொடங்கின. பூஜைகள் முடிந்தபிறகு கொடிமரத்தில் கோயில் தலைமை தந்திரி சஜித் சங்கரநாராயணரூ திருக்கொடியை ஏற்றினார். இதைக்கண்டதும் சுற்றி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கோயில் மேல்சாந்திகள், மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிநாயர், ஜோதீஷ் குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், கோயில் மேலாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று தொடங்கிய திருவிழா 23ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலாங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இந்து சமய சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலமும் நடைபெறும். 9ம் நாள் விழாவான 22ம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருவிழாவான 23ம்தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடக்கிறது. இதையடுத்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடைபெறும். நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆராட்டுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.

The post கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: