வழக்கம்போல் மாணவிகள் அசத்தல் பிளஸ்1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி: கோவை மாவட்டம் முதலிடம்

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நடத்தப்படும் பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.17%. கோவை மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 7534 பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 பேர் மாணவியர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 பேர் மாணவர்கள்.

மொத்த மாணவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதன் தேர்ச்சி விகிதம் 91.17%. தேர்ச்சி பெற்றவர்களில் மாணவியர் 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் (94.69%), மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் (87.26%). மாணவர்களை விட மாணவியர் 7.43 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.93% ஆக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் நடந்த பிளஸ்1 தேர்வில் மொத்தமுள்ள 7534 மேனிலைப் பள்ளிகளில் 1964 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு மேனிலைப் பள்ளிகளை பொருத்தவரையில் 241 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இந்நிலையில், அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.09%, இருபாலர் பள்ளிகள் 91.61%, பெண்கள் பள்ளிகள் 94.46%, ஆண்கள் பள்ளிகள் 81.37% தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி: அறிவியல் பாடப்பிரிவுகள் 94.31%, வணிகவியல் பாடப் பிரிவுகள் 86.93%, கலைப் பிரிவுகள் 72.89%, தொழிற்பாடப் பிரிவுகள் 78.72% தேர்ச்சி பெற்றுள்ளன. முக்கிய பாடங்களை பொருத்தவரையில் இயற்பியல் 97.23%, வேதியியல் 96.20%, உயிரியல் 98.25%, கணக்கு 97.21%, தாவரவியல் 91.88%, விலங்கியல் 96.40%, கணினி அறிவியல் 99.39%, வணிகவியல் 92.45%, கணக்குப் பதிவியல் 95.22% தேர்ச்சியை எட்டியுள்ளன. முக்கியப் பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171, கணக்கு 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 620, கணக்குப் பதிவியல் 415, பொருளியல் 741, கணினிப் பயன்பாடுகள் 288, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் 293 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். இதுதவிர ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 8418 பேர். மாற்றுத் திறனாளிகள் 7504 பேர் (91.27%) தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 170 பேர் (90.90%) தேர்ச்சி பெற்றனர்.

* முதல் 3 இடம் பெற்ற மாவட்டங்கள்…
தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வில் கோவை மாவட்டம் 96.02 சதவீத தேர்ச்சியை பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 95.56% பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 95.23% பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளை பொருத்தவரையில் ஈரோடு மாவட்டம் 92.86% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 92.59% பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 92.06% பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

The post வழக்கம்போல் மாணவிகள் அசத்தல் பிளஸ்1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி: கோவை மாவட்டம் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: