மூலிகை வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்: 2 நாள் தேசிய கருத்தரங்கில் அறிவுறுத்தல்

 

ஊட்டி, பிப்.27: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் ஊட்டியில் தொடங்கியது. மூலிகை ஆராய்ச்சி மைய டைரக்டர் ஜெனரல் சுபாஷ் கவுசிக் வரவேற்றார். எமரால்டு மூலிகை ஆராய்சசி மையத்தின் பொறுப்பாளர் சசிகாந்த் கருத்தரங்கு குறித்து விளக்கினார். தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவர் அணில் குரானா தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்து, மலரை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘ஊட்டி எமரால்டில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையம் 7.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.  இந்த மையத்தில் 70 வெளிநாட்டு மூலிகைகள் பயிரிடப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு 3.15 மெட்ரிக் டன் மூலிகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மூலிகைகளின் தேவை அதிகரித்தது.

எனவே, மூலிகை வேளாண் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் மூலிகைகளை ஊடுபயிராக பயிரிட்டு பலனடையலாம். நமக்கு தேவையாக மூலிகைகள் 69 சதவீதம் காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 31 சதவீதம் மட்டுமே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 70 மூலிகைகள் பயிரிடப்படுவதால், அவற்றின் சாகுபடியை பெருக்கி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

மூலிகைகளின் சந்தை மதிப்பு அதிகம் என்பதால், விவசாயிகள் மூலிகை விவசாயத்தை மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம். மேலும், வீணாகும் மூலிகை மற்றும் கழிவுகள் நல்ல உரமாகும். இதை உரமாக பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். ஊட்டியில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையம் மூலிகை பொருட்கள் ஆய்வகமாக மாற்ற வேண்டும்’’ என்றார். கருத்தரங்கில், ஆயுஷ் அமைச்சக ஹோமியோபதி ஆலோசகர் சங்கீதா துகல், கேரள மூலிகை துறை தலைவர் ஷோபா சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post மூலிகை வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்: 2 நாள் தேசிய கருத்தரங்கில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: