மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் டிப்பர் லாரி மீது கார் மோதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி: மனைவி சீரியஸ்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே நாப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (63). இவர், கடந்த 1991-96ம் ஆண்டுவரை பொன்னேரி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார்.அப்போது திண்டுக்கல் எம்எல்ஏவாக இருந்த நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் இருந்துள்ளார். இத்தம்பதியின் மகள் ரவீனா (19). இன்று காலை 8 மணியளவில் தங்களின் மகள் ரவீனாவை கல்லூரியில் விட்டுவிட்டு, வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியே முன்னாள் எம்எல்ஏக்களான ரவிக்குமார்-நிர்மலா தம்பதி காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை ரவிக்குமார் ஓட்டி வந்துள்ளார். நெமிலிச்சேரி அருகே கார் வந்தபோது, ரவிக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னே சென்ற டிப்பர் லாரியின்மீது வேகமாக மோதியது. இதில், காரில் இருந்த ரவிக்குமார்-நிர்மலா தம்பதியர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலாவை மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கார் விபத்தில் பலியான முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமாரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உள்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, ரவிக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் டிப்பர் லாரி மீது கார் மோதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி: மனைவி சீரியஸ் appeared first on Dinakaran.

Related Stories: