தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

 

ஈரோடு,பிப்.25: ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் கேடிகே. தங்கமணி வீதியைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(36). கட்டிட தொரிலாளி. இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில்,தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ஜோதிலட்சுமி வீட்டின் அருகே அவரது தாய் வீடும் உள்ளது. தினமும் இரவு ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன்கள் அருகில் இருக்கும் தாய் வீட்டில் படுத்து தூங்குவது வழக்கம்.

நேற்றுமுன்தினம் இரவு ஜோதிலட்சுமி தனது மகன்களுடன் அருகில் இருக்கும் தாய் வீட்டுக்கு தூங்க சென்று விட்டனர். நேற்று காலை ஜோதிலட்சுமி எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையின் பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபட்டில் ஒரு மொபட்டை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: