ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த சிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்

 

மொடக்குறிச்சி, ஜூலை 23: வடுகப்பட்டி அருகே எல்பிபி கொப்பு வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டி பண்ணைக்கிணறு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பண்ணைக்கிணற்றில் இருந்து மாட்டுமடை காட்டுப்புதூர் வரை கொப்பு வாய்க்கால் செல்கிறது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கிஷோர், அரச்சலூர் ஆர்ஐ. பிரபு, வடுகபட்டி விஏஓ. பாலகிருஷ்ணன் மற்றும் அரச்சலூர் போலீசார் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று 4 வீடுகளை இடித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த பல ஆண்டுகளாக இந்த வழியாக வாய்க்கால் இல்லை. ஆக்கிரமிப்பு உள்ளது குறித்து அளவீடு செய்வதற்கு அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. திடீரென்று அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து பல லட்சம் மதிப்பிலான 4 வீடுகளை இடித்து விட்டனர். முறையான முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் வீடுகளை இடித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியை மட்டுமே இடித்துள்ளனர். மாட்டுமடை காட்டுப்புதூரிலிருந்து பண்ணைக்கிணறு வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும். ஒருதலை பட்சமாக குறிப்பிட்ட பகுதியை மட்டுமே இடித்துள்ளனர். எனவே இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என கூறினர்.

The post ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த சிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: