ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் வங்கி அமைக்க முடிவு

 

ஈரோடு, ஜூலை26: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64 கோடி செலவில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடத்தில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த ஆபரேசன் தியேட்டர், கேத்லேப், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட உள்ள நிலையில் தாய்பால் வங்கி தொடங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மக்கள்நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) அம்பிகா சண்முகம் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெசாலிட்டி கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் கேத்லேப் கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாததால் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பபட்டு வருகின்றனர். எனவே ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய்பால் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாய்பால் வங்கியானது புதிய கட்டிடத்தின் 2வது மாடியில் செயல்படும். தாய்பால் தானம் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் தாய்பால் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

The post ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் வங்கி அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: