சென்னையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்களை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

அம்பத்தூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள், ‘‘சமூக தாகம் தீர்ப்போம் சுகாதாரத்தை காப்போம்” என்ற தலைப்பில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அம்பத்தூர் டன்லப் மைதானத்தில் நேற்று நடந்தது. அம்பத்தூர் மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் 771 பேருக்கு, 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் உதவி தொகைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசுகையில், ‘சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர் வடிகால் தொழிலாளர்கள் தற்போது வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளேன். மேலும் தொழிலாளர்களின் தேவையை அறிந்து தமிழக முதல்வரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். அதன்பின்பு நிருபர்களிடம் கூறியதாவது, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளை சி.எம்.டி.ஏ மேற்கொள்ளபட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி திமுக செயலாளர்கள் நாகராஜ், ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்களை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: