கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அருங்காட்சியகத்தில் அரும்பொருட்கள் கண்காட்சி

 

ஈரோடு,பிப்.23: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் அரும்பொருட்கள் கண்காட்சியினை மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி பொதுமக்கள் வழங்கிய அரும்பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. இவ்விழாவிற்கு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பங்கேற்று கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில், பொதுமக்கள் அருங்காட்சியகத்திற்கு அளித்த அரும்பொருட்களான பெயர் பொறிக்கப்பட்ட மண் குடுவைகள், தட்டச்சு இயந்திரம், பழங்கால மோர் கடையும் பானை, பீங்கான் மின்சார பொத்தான்கள், பீங்கான் மின் பொருட்கள், திருகை கல், பெண்டுலம் கடிகாரம், மோர் மத்து, பனை ஓலை பெட்டிகள், நீத்து பெட்டி, தண்ணீர் எடுக்க பயன்படும் மர வாளி, மரக்கால் படி, அகல் விளக்கு, உரசுக்கற்கள், பாக்குவெட்டி, உப்பு ஜாடிகள், திருவலகை எனும் தேங்காய் துருவி உள்ளிட்ட பல வகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காட்சியை பார்க்க வரும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் நமது ஊரின் பண்பாடு, வரலாறு போன்றவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுவதாகவும், இந்த கண்காட்சி வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும் என காப்பாட்சியர் ஜென்சி கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அருங்காட்சியகத்தில் அரும்பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: