ஊழலுக்கு பெயர் போன மோடி அரசை ஒழித்து கட்ட வேண்டும் பாட்டு போட்டு கேரள பாஜ தலைவர் நடைபயணம்

திருவனந்தபுரம்: பாஜ கேரள மாநில தலைவர் சுரேந்திரன் நடத்தும் பாதயாத்திரை நேரலையில் ஊழலுக்குப் பெயர் போன ஒன்றிய அரசு என்ற பாடல் ஒலிபரப்பானது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ கேரள மாநில தலைவர் சுரேந்திரன், கேரளாவின் வட மாவட்டமான காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பாதயாத்திரை நடத்தி வருகிறார். அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் இந்த பாதயாத்திரை நிறைவடைகிறது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதயாத்திரை தொடர்பான காட்சிகள் பாஜவின் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த பாதயாத்திரை மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது யூடியூபில் பாதயாத்திரை காட்சிகளுக்குப் பின்னணியில் பாஜவின் கட்சிப் பாடல்கள் ஒலிபரப்பானது. அதில், ஊழலுக்கு பெயர் போன ஒன்றிய அரசு, அந்த ஆட்சியை விரைவில் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பாடலும் சேர்க்கப்பட்டிருந்தது.

அந்தப் பாடலைக் கேட்ட பாஜ தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது சர்ச்சையானதை தொடர்ந்து உடனடியாக அந்தப் பாடல் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் கேரள பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைவர் சுரேந்திரனுக்கும், பாஜவின் ஐடி செல் தலைவருக்கும் இடையே மோதல் இருந்து வருவதாகவும், இதன் காரணமாக வேண்டுமென்றே அந்தப் பாடலை சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஐடி செல் தலைவரை நீக்கவேண்டும் என்று கூறி சுரேந்திரன் கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

The post ஊழலுக்கு பெயர் போன மோடி அரசை ஒழித்து கட்ட வேண்டும் பாட்டு போட்டு கேரள பாஜ தலைவர் நடைபயணம் appeared first on Dinakaran.

Related Stories: