தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி; ஆந்திர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது: வீட்டுக்காவலில் வைப்பு

திருமலை: ஆந்திராவில் வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து இளைஞர்களுடன் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் வழங்கவில்லை என்பதை கண்டித்து, வேலையில்லாத இளைஞர்களுடன் இன்று காலை விஜயவாடாவில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடபோவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர், இளைஞர்களுடன் நேற்று விஜயவாடாவிற்கு புறப்பட தயாராகினர். இதையறிந்த போலீசார், காங்கிரஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தனர். இந்நிலையில் தடையை மீறி இன்று காலை ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடாவுக்கு புறப்பட்டனர். அவர்களையும் போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இருப்பினும் சில இடங்களில் இருந்து வந்து தடையை மீறி இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் இன்றைய முற்றுகை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஷர்மிளாவும் பங்கேற்க இருந்தார். இதனால் அவரையும் போலீசார் கைது செய்ய நேற்றிரவு வீட்டின் அருகே காத்திருந்தனர். இதையறிந்த ஷர்மிளா, நேற்றிரவு தனது வீட்டிற்கு செல்லாமல் விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஆந்திர ரத்னா பவனில் தங்கினார். அங்கேயே படுத்து தூங்கினார்.இந்நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலையில்லாதோர் சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் வீட்டுக்காவலில் வைப்பீர்களா? ஆயிரக்கணக்கானோர் ஏன் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்? ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த கூட உரிமை இல்லையா? நான் ஒரு பெண் என்பதால் வீட்டுக்காவலை தவிர்க்க, போலீசாரிடம் இருந்து தப்பித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு தங்கியுள்ளேன். ஒரு பெண் இந்த நிலையில் வாழவேண்டிய சூழ்நிலை இருப்பது உங்களுக்கு அவமானமாக இல்லையா? நாங்கள் தீவிரவாதிகளா? அல்லது சமூக விரோத சக்திகளா? எங்களை தடுக்க ஏன் முயல்கிறீர்கள்? எங்களைத்தடுக்க நினைத்தாலும், எங்கள் செயல்பாட்டாளர்களை ஆங்காங்கே நிறுத்தினாலும், தடுப்பு வேலிகள் அமைத்தாலும் வேலையில்லாதோருக்கு ஆதரவான போராட்டத்தை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி; ஆந்திர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது: வீட்டுக்காவலில் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: