அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டார். நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின் 28வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், செபி, ஐஆர்டிஏ, ஐபிபிஐ, ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, சர்வதேச நிதி சேவை மையம், நிதி அமைச்சகம், பொருளாதார விவகார துறை உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் நாட்டின் நிதி செயல்பாடுகள் சார்ந்த ஆலோசனை, நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக, வாடிக்கையாளர் விவர படிவத்தை (கேஒய்சி) வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒரே மாதிரியாக தயாரிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் அதனை நிறுவனங்கள் தங்களுக்குள் பரிமாறி கொள்ள வசதியாக இருக்கும். நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இப்போதுள்ள பொருளாதார சூழலுக்கு எவ்வித பிரச்னைகளும் ஏற்பட்டுவிட கூடாது. நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எந்த நிகழ்வும் முன்னதாக தடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நிதிசார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும். அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்கப்பட கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post அதிகாரபூர்வமற்ற கடன் செயலிகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: