உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தண்டலைபுத்தூர் கிராமத்தில் முகாமிட்டு கலெக்டர் ஆய்வு பணி

முசிறி: முசிறி அருகே தண்டலைபுத்தூர் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருச்சி கலெக்டர் தண்டலைபுத்தூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் கிராமத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் நேற்று முகாமிட்டார். அப்போது தண்டலைபுத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வளாகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை, இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். பெரியவேளகாநத்தம், தண்டலைபுத்தூர், பொன்னாங்கன்னிபட்டியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், கழிவறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்ட இடங்களையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார். மேலும் தண்டலைபுத்தூரில் இயங்கி வரும் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதியில் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். தண்டலைபுத்தூர், பொன்னாங்கன்னிபட்டியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பெரியவேளகாநத்தம், தண்டலைபுத்தூர் மற்றும் பொன்னாங்கன்னிபட்டியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் இருப்பு, பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். தண்டலைபுத்தூர் கிராம நூலகத்திற்கு சென்று உள் கட்டமைப்பு வசதி அடிப்படை வசதிகள் புத்தகங்களின் இருப்பு விவரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் தண்டலைபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளுக்கு தார்ப்பாய், பண்ணை கருவிகள் விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவி, மூன்று சக்கர வாகனம் மற்றும் விவசாயி ஒருவருக்கு உழவர் சந்தையில் காளான் விற்பனை செய்வதற்கான ஆணைகள், பட்டா வேண்டி பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 10 திருநங்கைகள் உட்பட 16 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தனி நபர்களுக்கான தொழில் கடன், இணை மானிய நிதிக்கான ஆணை ஆகியவற்றையும் கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தண்டலைபுத்தூர் கிராமத்தில் முகாமிட்டு கலெக்டர் ஆய்வு பணி appeared first on Dinakaran.

Related Stories: