லால்குடி அருகே தச்சங்குறிச்சியில் மண்புழு உரம் உற்பத்திக்கு பதிவு செய்து கொள்ளலாம்

 

லால்குடி, ஜூலை 26: லால்குடி வட்டாரம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மண்புழு உர உற்பத்தி செய்வதற்கான சில்பாலின் மண்புழு உர படுக்கைகள் மான்யத்தில் விவசாயி ஜோசப் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம்தேதி வேளாண்மை துறையின் வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டது.

மண்புழு உரப்படுக்கைக்கு மாட்டு சாணம் மட்டும் இடப்பட்டு 20 நாட்களுக்கு நன்கு நீர் தெளித்து அதன் வெப்பம் தணிந்து வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர் தெளித்து, பின்னர் மாட்டு சாணம் பாதி மக்கிய நிலையில் ஆப்பிரிக்க வகை மண்ப்புழு 2 கிலோ வரை விடப்பட்டது (யூட்ரிலஸ் யூஜினே) மர நிழலில் அமைக்கப்பட்ட இந்த மண்புழு படுக்கையை எலி மற்றும் கோழிகள் மண்புழுக்களை சேதப்படுத்தாமல் இருக்க பாலிதீன் வலை கொண்டு முடி வைத்து தினமும் ஈரப்பதத்தை (புட்டு பதத்தில்)தக்க வைக்க இரு வேளை நீர் தெளித்து வந்தனர்.

இரண்டரை மாதத்தில் நன்கு மக்கிய மண்புழு உரம் கிடைக்கபெற்றது. இந்த மண்புழு உர படுக்கைகள் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சத மான்யத்தில் வழங்கப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் லால்குடி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

The post லால்குடி அருகே தச்சங்குறிச்சியில் மண்புழு உரம் உற்பத்திக்கு பதிவு செய்து கொள்ளலாம் appeared first on Dinakaran.

Related Stories: