பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவ விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

குன்றத்தூர், பிப்.21: குன்றத்தூர் முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருக்கால்யாண வைபவம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் படல் பெற்ற இக்கோயிலில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வெரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், 5ம் நாளான நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி – தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர், சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு மேள, தாளம் முழங்க முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக ஏராளமான சீர் வரிசைகள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு, சன்னிதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர், வள்ளி – தெய்வானை சமேதராக முருகப்பெருமான் பல்லக்கில் எழுந்தருளி கோயில் வளாகம் மற்றும் முக்கிய மாட வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆங்காங்கே கூடியிருந்த பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து, `அரோகரா அரோகரா’ கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு சாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உபயதாரர்கள் வருகை தந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் கன்யா, அறங்காவலர்கள் குணசேகரன், சரவணன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.

The post பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவ விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: