கலைஞர் கனவு இல்லம் திட்ட பணி ஆணை வழங்கும் விழா தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு வழிவகை செய்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்

திருப்போரூர், ஜூலை 24: திருப்போரூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் விழாவில், ‘தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக வழிவகை செய்தவர் கலைஞர்’ என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில், கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 466 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 466 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது: திமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு குடிசை வீடுகூட இருக்கக்கூடாது எனவும், 2024-25ம் ஆண்டுக்குள் 1 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கட்டமாக 16 ஆயிரத்து 87 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து திருப்போரூர் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றியங்களில் நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும் படிப்படியாக மாவட்டம் முழுவதும் இப்பணிகள் நடைபெறும்.

மேலும், தமிழகம் மட்டும் இல்லாமல் ஏழை, எளிய மக்களுக்கு குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக மாற்ற 1972ல் இந்தியா முழுவதும் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து ஏழை, எளிய மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக வழிவகை செய்தவர் கலைஞர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, திருப்போரூர் ரவுண்டானா பகுதியிலுள்ள ரேஷன் கடையில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முறையான முறையில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர், குடும்ப அட்டைதாரருக்கு உணவு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலைச்செல்வன், பூமகள் தேவி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் கனவு இல்லம் திட்ட பணி ஆணை வழங்கும் விழா தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு வழிவகை செய்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: