குன்றத்தூர் அருகே ₹23 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

குன்றத்தூர், ஜூலை 24: குன்றத்தூர் அருகே ₹23 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தினை வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டது. குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அதில், தண்ணீர் கம்பெனி, கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வது, கல் அறுக்கும் தொழிற்சாலை ஆகியவை நடத்தி வருவதாக குன்றத்தூர் தாசில்தாருக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதன் அடிப்படையில், நேற்று குன்றத்தூர் தாசில்தார் மாலினி, வருவாய் அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், கல் அறுக்கும் தொழிற்சாலை மற்றும் தண்ணீர் கம்பெனி இருப்பதால் அதனை அப்புறப்படுத்துவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம் கேட்டனர். அதன்படி, சில நாட்கள் கால அவகாசத்தை வருவாய் துறையினர் வழங்கினார். அதே சமயம் ஆக்கிரமிப்பு பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தற்போது மீட்கப்பட்ட 2.87 ஏக்கர் அரசு நிலத்தின் மொத்த மதிப்பு ₹23 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உரிய அறிவிப்பு ஏதும் இல்லாமல் வருவாய்த்துறை அதிகாரிகள், காம்பவுண்ட் சுவர்களை இடித்து தள்ளி இடத்தை எடுத்துள்ளதாக அந்த இடத்தை பயன்படுத்தி வந்தவர்கள் தெரிவித்த நிலையில், ஏற்கனவே இடத்தை எடுப்பது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post குன்றத்தூர் அருகே ₹23 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: