மேம்பால பணியின்போது குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

செங்கல்பட்டு, ஜூலை 27: சிங்கபெருமாள் கோவில் அருகே மேம்பாலப் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் பல லட்சக்கணக்கான லிட்டர் சாலையில் ஆறாக ஓடியது. சிங்கபெருமாள் கோயில் பகுதியில் சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சிமென்ட் குழாய்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை மேம்பால பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் உடைந்தது. இதில், சிமென்ட் குழாயில் இருந்து 50அடி உயரத்திற்கு வானத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை தண்ணீரில் நனைந்தபடி சென்றனர். குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பைப்லைன் உடைப்பு குறித்து மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வால்வுகளை அடைத்து தற்காலிகமாக குழாய்களில் வரும் குடிநீர் வெளியேறுவதை நிறுத்தினர். அதனைத்தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது. பைப்லைன் உடைப்பு காரணமாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.

The post மேம்பால பணியின்போது குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: