கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியசுற்றுலாத்தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். கடந்த சில மாதங்களாக யானைகள் இந்த பகுதியில் முகாமிட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். முகாமிட்டிருந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், பேரிஜம் வனப்பகுதிக்கு சென்று வந்த சுற்றுலா பயணிகள், யானைகள் கூட்டத்தை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பேரிஜம் வனப்பகுதியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பேரிஜம் வனப்பகுதியை தற்காலிகமாக மூடலாமா எனவும் பரிசீலித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ‘பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்தால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பேரிஜம் வனப்பகுதி தற்காலிகமாக மூடப்படும்’ என்றார்.

The post கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: