போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்

போடி: போடியில் 3 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனவும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு அந்தப் பகுதியில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறுகிய ரயில் பாதையாக இருந்த மதுரை-போடி லைன் தடத்தை அகலப் பாதையாக மாற்றுவதற்காக கடந்த டிச.31, 2010ல் சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும் அகலப்பாதை பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை. பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2017ம் ஆண்டு பணிகள் துவங்கின. ரூ.400 கோடி மதிப்பீட்டில் அகலப்பாதை பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் 12 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் மதுரை, சென்னைக்கு ரயில் சேவை துவங்கியுள்ளது.

இந்த நிலையில் போடி சுப்புராஜ்நகர்-வெண்ணிமலை தோப்பு சாலையானது போடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இன்ஜின் திருப்பும் சாலையாக இருக்கிறது. மதுரையில் இருந்து போடிக்கு வரும் ரயில் போடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை இறக்கி விட்டு மாலை வரை ரயில் நிறுத்தப்படுகிறது. ரயிலினின் இஞ்சின் மட்டும் சுப்புராஜ் நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு திருப்பப்படுகிறது. இந்த பாதையில் கடந்த 11 ஆண்டுகளாக ரயில் சேவை இல்லாததால் பொதுமக்கள் ரயில்வே லைனை கடந்து சென்று வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை துவங்கியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து தர வலியுறுத்தினர். இதையடுத்து 120 மீ. அகலத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது மெகா தடுப்புச் சுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது தொடர் மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும், விரைவில் சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு வெளியேற்றுவதற்கான வசதிகளை அருகிலேயே வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: