ஆக்கிரமிப்பில் உள்ள மராடி ஊராட்சி பள்ளி நிலத்தை மீட்டு தர வேண்டும்

 

ஊட்டி, பிப்.20: தனியார் ஆக்கிரமித்துள்ள மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிலத்தை மீட்டு தர கோரி பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். பந்தலூர் அருகே மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கடந்த 2ம் தேதி அன்று மாவட்ட கலெக்டரிடம் நாங்கள் மனு அளித்தோம்.

இதன் அடிப்படையில் கடந்த 14ம் தேதியன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி பந்தலூர் வட்ட துணை வட்டாட்சியர், விஏஒ மற்றும் சர்வேயர் ஆகியோர் பள்ளி நில அளவைக்காக வந்ததாக கூறி பள்ளி நிலத்தை அளவிடாமல் தனியார் நிலத்தினை மட்டும் அளவை செய்து விட்டு, பள்ளி நிலத்தை முறையாக அளவை செய்யாமல் சென்று விட்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கேட்ட போது முறையான பதில் கூறாமல் பின்னர் அளவை செய்வதாக சென்று விட்டனர்.

இதனால் பள்ளி பெற்றோர்களுக்கும், மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் சர்வேயர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் பள்ளி நிலத்தை கையகப்படுத்தியுள்ள தனியாருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பள்ளி சுற்று சுவர் கட்டும் பணி உட்பட அனைத்து பணிகளையும் தடுத்து வருகிறார்கள். இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், இங்குள்ள சர்வேயரை வைத்து நில அளவை செய்யாமல் வேறு சர்வேயர் வைத்து நிலத்தை அளவீடு செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post ஆக்கிரமிப்பில் உள்ள மராடி ஊராட்சி பள்ளி நிலத்தை மீட்டு தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: