உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறுவதை அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைத்திருப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறுகிறது. இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற கர்நாடக முதல்வரின் அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ம் ஆண்டில் ஒன்றிய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான். அதை ஒன்றிய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தை கண்டித்தும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறுவதை அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: