டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. மொத்தம் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களில் ஆம்ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜவுக்கு 8 இடங்களும் உள்ளன. இந்த நிலையில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை தலைக்கு ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி தனது ஆட்சியை கவிழ்க்க பா.ஜ முயற்சி செய்வதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று திடீரென தனது அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறும்போது,’ மற்ற மாநிலங்களில் பொய் வழக்கு பதிவு செய்து ஆட்சியை கவிழ்த்து வருகிறார்கள். அதே போல் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள். டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்து எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தார்கள். யாரும் விலைபோகவில்லை. அவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவிக்கவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது’ என்றார்.

7 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: டெல்லி சட்டபேரவையில் ஆளுநர் உரையின்போது பாஜ எம்எல்ஏக்கள் எழுந்து ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பேரவை கூடியதும் துணைநிலை ஆளுநர் உரையை வாசித்து கொண்டிருந்த போது அமளியில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏக்கள் 7 பேரையில் அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். பின்னர் பாஜ எம்எல்ஏக்கள் 7 பேரையும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இன்று கோர்ட்டில் ஆஜராக முடிவு

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: