ரோகித் 131, ஜடேஜா 110*, சர்பராஸ் 62 ஆரம்ப சரிவிலிருந்து மீண்டு இந்தியா அபார ரன் குவிப்பு

ராஜ்கோட்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன் குவித்துள்ளது. கேப்டன் ரோகித், ஜடேஜா சதம் விளாச, அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியாக அரை சதம் அடித்து அசத்தினார். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் (26 வயது) , விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் (23 வயது) அறிமுகமாகினர்.

ஜெய்ஸ்வால், ரோகித் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன் எடுத்து மார்க் வுட் வேகத்தில் ஜோ ரூட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரஜத் பத்திதார் 5 ரன் எடுத்து ஹார்ட்லி சுழலில் பென் டக்கெட் வசம் பிடிபட, இந்தியா 8.5 ஓவரில் 33 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில், இளம் வீரர்களைக் களமிறக்காமல் அனுபவ ஆல் ரவுண்டரும் உள்ளூர் வீரருமான ரவீந்திர ஜடேஜாவை உள்ளே அனுப்பியது இந்திய அணி நிர்வாகம்.

ரோகித் – ஜடேஜா ஜோடி பொறுப்புடன் நிதானமாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க, இந்திய ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. உறுதியுடன் நங்கூரம் பாய்ச்சி நின்ற இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். ரோகித் 71 பந்திலும், ஜடேஜா 97 பந்திலும் அரை சதம் அடிக்க… இந்திய ஸ்கோர் 200 ரன்னைக் கடந்து முன்னேறியது. ரோகித் 131 ரன் (196 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மார்க் வுட் வேகத்தில் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட்டார். ரோகித் – ஜடேஜா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஜடேஜாவுடன் அறிமுக வீரர் சர்பராஸ் கான் இணைந்தார்.நம்பிக்கையுடன் அடித்து விளையாடிய சர்பராஸ் தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். 99 ரன்னில் இருந்த ஜடேஜா சதத்தை நிறைவு செய்வதற்காக சர்பராஸை அழைத்து, பின்னர் ரன் எடுக்க சாத்தியமில்லை என்பதை உணர்ந்து திரும்பிப் போகுமாறு சைகை செய்தார்.

அதற்குள்ளாக பாதி தூரத்தைக் கடந்துவிட்ட சர்பராஸ் (62 ரன், 66 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 86 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன், குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 3, ஹார்ட்லி 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* 1932ல் இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இருந்து இந்திய அணி பேட்டிங் வரிசை டாப் 7ல் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

* சர்பராஸ் தேவையில்லாமல் ரன் அவுட்டானதை பார்த்த கேப்டன் ரோகித், தனது தொப்பியை ஆத்திரத்துடன் தரையில் வீசி எறிந்து விரக்தியை வெளிப்படுத்தினார்.

* ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது 11வது சதத்தை விளாசினார்.

* டெஸ்டில் ஜடேஜாவுக்கு இது 4வது சதமாகும்.

The post ரோகித் 131, ஜடேஜா 110*, சர்பராஸ் 62 ஆரம்ப சரிவிலிருந்து மீண்டு இந்தியா அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: