சாம்பல் புதன் முன்னிட்டு சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது: சர்ச்சில் மக்கள் குவிந்தனர்

 

நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இதையொட்டி கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று துவங்கியது. இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம், தபசு காலம் என்று அழைக்கிறார்கள். 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவரை தியானிப்பர். உண்ணும் உணவு, உடை போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவிகைள செய்வர். தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. இதன்படி இன்று சாம்பல் புதன் தினமாகும். இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி இன்று காலை நடந்தது. பேராலய அதிபர் இருதயராஜ் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினார். பேராலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று காலை 6.15 மணிக்கு பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பேராலயம், தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் 16ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் கிறிஸ்து இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 24ம் தேதி குருத்து ஞாயிறு தினத்தையொட்டி குருத்தோலைகளை கைகளில் ஏந்தி செல்லும் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி, மார்ச் 28ம் தேதி பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். 29ம் தேதி இயேசு உயிர்நீத்த புனித வெள்ளி நிகழ்ச்சியை முன்னிட்டு தேவாலயங்களில் புனித சிலுவைப்பாதை மற்றும் திருச்சிலுவை ஆராதனை மற்றும் திருவிருந்து, 30ம்தேதி பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடக்கும். 31ம் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை, சிறப்பு ஆடம்பர பாடல் திருப்பலியுடன்
கொண்டாடப்படும்.

 

The post சாம்பல் புதன் முன்னிட்டு சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது: சர்ச்சில் மக்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: