தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்ட போது பிரதமர் வராதது வருத்தம் முதல்கட்டமாக ரூ.5,000 கோடி கூட தர ஒன்றிய பாஜ அரசுக்கு மனசில்லை: ஆவடி நாசர் எம்எல்ஏ பேச்சு

தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்ட போது பிரதமர் வராதது வருத்தத்திற்குரியது, முதல்கட்டமாக கேட்ட ரூ.5ஆயிரம் கோடியை கூட தருவதற்கு ஒன்றிய பாஜ அரசுக்கு மனசில்லை என்று ஆவடி நாசர் எம்எல்ஏ பேரவையில் பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் ஆவடி நாசர் (திமுக) பேசியதாவது: விளிம்பு நிலையில் இருந்த சிறு பிள்ளை தன் தேவையை கூறியபோது, உடனே தாயுள்ளத்தோடு அதனைத் தீர்த்துவைத்த பெருமை, முதல்வரையே சேரும். இன்றைய ஆட்சிக்கு முன்பும், ஆட்சிக்கு பின்பும் 2004ல் சுனாமி பேரிடர் ஏற்பட்டபோது, முதல்வர் கடலோரப் பகுதிகளிலுள்ள அனைத்து ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் அனைவரையும் அழைத்து கடலோரப் பகுதிவாழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார்.

அதேபோன்றே ஓராண்டு காலம் கொரோனா பெருந்தொற்று முதல் அலை வந்தபோதும், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதிலிருந்து அவர்களது மருத்துவ வசதிகளையும் செய்த பெருமை, முதல்வருக்கு உண்டு. ஆட்சிக்கு வந்ததும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பிபி கிட் போட்டு மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்த பெருமை, முதல்வர் ஒருவருக்கே சாரும். இந்திய அளவில் வேறு யாரும் இவ்வாறு நோயாளிகளின் அறைக்குள் செல்லவில்லை.

2001 ஜனவரி 26ம் தேதி, 52வது குடியரசு தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் மாண்டார்கள். 1,67,000க்கும் மேல் படுகாயம் அடைந்தார்கள். 4 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் வீடு வாசல் இழந்து, வீடெல்லாம் விழுந்து விட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் கலைஞர். அந்த நேரத்தில் நாம் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உண்ணுகின்ற உணவால், உடுத்துகின்ற உடையால் பேசுகின்ற பேச்சால், அனைத்திலும் மாறுபட்ட நாம், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்காக நாம் ஒரு விமானம் மூலம் மருத்துவ வசதி, அரிசி, காய்கறி, பால், சர்க்கரை மற்றும் கோதுமை போன்றவற்றை அனுப்பிவைத்தோம்.

அன்றையதினம் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவருடைய தலைமையில் ஒரு குழுவை அனுப்பிவைத்து அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்த காரணத்தால், ஏறக்குறைய 2001, அக்டோபர் மாதம் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்தார். அப்போது தமிழக அரசு உதவி செய்ததற்கு, கலைஞருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். உண்மையில் அது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ஆனால், இப்போது, இங்கு இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட்டுள்ளது.

வட மாவட்டங்களில் 61 செ.மீ. மழை, தென் மாவட்டங்களில் 105 செ.மீ. மழை பெய்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் நமக்குத் தர வேண்டிய ஈவுத் தொகையை கேட்டபோது கூட தரவில்லை. குஜராத்தில் மழையின் போது, பிரதமர் விமானத்தில் சென்று பார்வையிட்டார். வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய தினம் நம்முடைய ஈவுத் தொகையை தரவில்லை. நமக்கு இந்த பேரிடரில் ஏற்பட்ட இழப்பு சுமார் 37,906 கோடி. முதற்கட்டமாக, ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே கேட்கப்பட்டது. அதைக் கூட தருவதற்கு ஒன்றிய அரசிற்கு மனசு இல்லை. குஜராத்தில் பேரிடர் ஏற்பட்டபோது பிரதமர் நேரில் சென்றார், வாழ்த்துக்கள். அதேபோன்று, உத்தரப்பிரதேசம் சென்றார். அவர்களது கட்சி ஆளுகின்ற மாநிலம்.

ஆனால், தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது அவர் வராதது உண்மையிலேயே மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்து சென்றார்கள். ஆனால் என்ன பயன், நாம் கேட்ட ஈவுத் தொகையைக் கூட தரவில்லை. ஒரு கண்ணில் பாலும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறார்கள். காமராஜர், கலைஞர் ஆகியோர் பல பிரதமர்களை, ஜனாதிபதிகளை உருவாக்கியதை போல இன்னும் 3 மாதத்தில் முதல்வர் அடையாளம் காட்டக்கூடியவர் பிரதமராக வந்து நமக்குத் தரவேண்டிய நிதியைத் தர வேண்டும் என்றார். 2001 அக்டோபர் மாதம் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்தார். அப்போது குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு தமிழக அரசு பேருதவி செய்தது. இதற்காக கலைஞருக்கு மோடி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். ஆனால், இப்போது, இங்கு இப்படிப்பட்ட பேரிடர் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நமக்குத் தர வேண்டிய ஈவுத்தொகையை கேட்டபோது கூட தரவில்லை.

The post தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்ட போது பிரதமர் வராதது வருத்தம் முதல்கட்டமாக ரூ.5,000 கோடி கூட தர ஒன்றிய பாஜ அரசுக்கு மனசில்லை: ஆவடி நாசர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: