உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!

பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்
னேறவேண் டும்வைய மேலே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: