ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2வது சுற்று தண்ணீர் திறப்பு

*44 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட பகுதிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம், 44 ஆயிரத்து 380 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட, மொத்தம் 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு, பரம்பிகுளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும், நீர் தேக்கப்பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி சுற்றியுள்ள பழைய ஆயக்கட்டுகளும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளான வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய் மற்றும் ஊட்டுக்கால்வாய்களுக்கும், குடிநீர் தேவைக்கும் அணையின் நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதில், கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு நவம்பர் மாதம் வரை, 26 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் உள்ள தென்னை, வாழை, மானாவாரி பயிர் மற்றும் நெல் உள்ளிட்டவைகளுக்கு தேவைக்காக, இரண்டாவது சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள், முதல் சுற்று போன்று 26 நாட்கள் தண்ணீர் வழங்க கேட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பிலோ 19 நாட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால், தண்ணீர் திறப்பு தள்ளிபோனது. இந்நிலையில், சில கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, 19 நாட்கள் தண்ணீர் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, இரண்டாவது சுற்று தண்ணீர் திறப்பது குறித்து, பொதுப்பணித்துறையினர் சில நாட்களுக்கு முன்பு, உத்தரவு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.

நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவையடுத்து நேற்று காலை, ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவாயிகள் கலந்து கொண்டனர். புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியார் ஊட்டுக்கால்வாய்களில் மொத்தம் 44 ஆயிரத்து 480 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு, 25 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 19 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய ஆயக்கட்டு பாசனத்தை தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும் இரண்டவாது சுற்று தண்ணீர் திறப்பால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததுடன், அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

The post ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2வது சுற்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: