விருதுநகர் அருகே 10ம் நூற்றாண்டு தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, பரளச்சி புரசலூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ரமேஷ், தர், தாமரைக்கண்ணன் ஆகியோர் களஆய்வு செய்தனர். அப்போது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொதுவாக தவ்வை என்பவர் மூதேவி என அழைக்கப்படுகிறார். இவருக்கு சேஷ்டா தேவி என்ற பெயரும் உண்டு. இவர், முற்கால பெண் தெய்வ வழிபாடுகளில் சிறந்து விளங்கியுள்ளார். இவரது வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நீர்நிலை அருகே இருக்கும். இதை வைத்து பார்க்கும்போது தவ்வை சிற்பங்கள் இருக்கும் ஊர்கள் விவசாயத்திலும், வளமையிலும் சிறந்து விளங்குவதை பார்க்கலாம். இவர் விவசாயத்திற்கும், பிள்ளைப் பேறுக்குமான கடவுளாக பார்க்கப்படுகிறார். தற்போது ஏதோ காரணத்தால் தவ்வை வழிபாடு கைவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் சிற்பங்கள் வாயிலாக தவ்வை வழிபாட்டை நம் முன்னோர் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதை ஆய்வாளர்கள் முன்னிறுத்துகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தவ்வை சிற்பம், 3 துண்டுகளாக சிதைந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்தில் தவ்வையின் மகன் மாந்தன், மகள் மாந்தி உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. மாந்தன் தலை பகுதி மாட்டின் தலையைப் போலவும், இரண்டு கரங்களில் வலது கரத்தில் ஆயுதம் ஏந்தியும், கால்களை தொங்கவிட்டும் தனது தாயுடன் அமர்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. மாந்தி சிற்பம் தலையில் மகுடம் அணிந்தும், கையில் மலர் ஏந்தியபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை பார்க்கும்போது, ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். பரளச்சியிலும் தவ்வை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post விருதுநகர் அருகே 10ம் நூற்றாண்டு தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: