கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்று தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறும்போது; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு நேரத்தில் எப்பொழுதுமே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின.

நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன. அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என உரிமையாளர்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என்று கூறினார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்கின்றனர். முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும். ஏப்ரல் மாதத்துக்குள் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வரும். அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இயக்கம்.

The post கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்று தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: