உத்திரமேரூரில் நடைபயணம் மேற்கொண்டு குடவோலை கல்வெட்டுகளை பார்வையிட்ட அண்ணாமலை


உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ நடைபயணம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபயணத்தினை தொடங்கி சன்னதி தெரு, பஜார் வீதி வழியாக நடைபயணமாக சென்று அம்பேத்கர் சிலை அருகே நடைபயணத்தை முடித்தார். அப்போது, பொதுமக்களுடன் செல்பி எடுத்தும், கைகள் குலுக்கியும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு அவர் நடைபயணம் மேற்கொண்டார். மேலும், பிரசித்தி பெற்ற வைகுண்ட வரதராஜபெருமாள் கோயிலில் உள்ள குடவோலை கல்வெட்டுகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘பத்தாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட வரதராஜபெருமாள் கோயிலில் நான்கு புறமும் கல்வெட்டுகள் உள்ளன. இதில், பழங்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

35 தவறுகள் செய்தவர்கள், தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர்கள் எனவும், தகுதியுள்ளவர்களின் நிபந்தனைகளும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்காலத்திலேயே வாரியம் இருந்துள்ளது. இதில், வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்கக்கூடாது எனவும், வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களின் உறவினர்கள் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் கல்வெட்டில் உள்ளன. சென்னை வாசிகள் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் மால் போன்ற இடங்களை தவிர்துவிட்டு சென்னையில் இருந்து 2 மணி நேர பயண தொலைவில் உள்ள உத்திரமேரூருக்கு வந்து இங்குள்ள புராதன கோயில்கள், கல்வெட்டுகள், முக்கூடல் சங்கமிக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட வேண்டும்” என்றார். நிகழ்வின்போது பாஜ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உத்திரமேரூரில் நடைபயணம் மேற்கொண்டு குடவோலை கல்வெட்டுகளை பார்வையிட்ட அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: